பாகுபலி 2 இன் மற்றுமொரு பிரம்மிக்க வைக்கும் சாதனை!

திரைப்படம் வெளியான 21 நாட்களிலேயே ரூ.1500 கோடி வசூலைத் தாண்டிய படம் என்ற இமாலய சாதனையை 'பாகுபலி 2' படைத்துள்ளது.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.

இந்நிலையில், உலகளவில் மொத்த வசூலில் ரூ.1500 கோடியை கடந்திருக்கிறது 'பாகுபலி 2'. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. மேலும், ரூ.1500 கோடியை கடந்ததைக் குறிப்பிடும் விதமாக ரம்யாகிருஷ்ணன் மற்றும் அனுஷ்கா அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழில் 'எந்திரன்' படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது 'பாகுபலி 2'. இன்னும் ஓரிரு நாட்களில் பங்குத் தொகையிலும் எந்திரன் சாதனையை முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள்.

தற்போது வார நாட்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவும், வார இறுதிநாட்களில் கூட்டம் அதிகமாகவும் இருப்பதால் கண்டிப்பாக ரூ.2000 கோடியைத் தொடும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.