ஜேர்மன் சிவம் சர்ச்சையில்

ஜேர்மன் சிவம் சர்ச்சையில்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மலையக மக்கள் அடங்கலாக தமிழ் மக்களை இழிந்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி தூசித்தமை தொடர்பில் கச்சாய் சிவம் குமரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை வைத்திருக்கும் நபருக்கு எதிராக ஜேர்மன் தூதகரத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இழிந்த சொற் பிரயோகங்களை பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக காணொளிகளை பதவிட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு, மலையக இளைஞர் தமிழ் சங்கத்தினர் இந்த முறைப்பாட்டு கடிதத்தை கையளித்துள்ளனர்.

சமூகத்தின் சுபீட்சத்தை மோசமடையச் செய்யும் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கு ஜேர்மன் தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலான ஒன்றாக கச்சாய் சிவம் குமரன் வெளியிட்டுள்ள காணொளிகள் அமைந்துள்ளதாக மலையக தமிழ் இளைஞர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் காணொளி மூலம் வெளியிடப்படும் கருத்துக்கள் உடனடியான உணர்வு ரீதியான தாக்கங்களை சில இனங்கள் மீது ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர்.

கச்சாய் சிவம் குமரனின் கருத்துக்கள், சில இனங்கள் ஏனைய இனங்களை விட சிறப்பான ஒன்றாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை, தேவையற்ற முரண்பாடுகளை நாட்டில் ஏற்படுத்தும் என அச்சமடைவதாக மலையக தமிழ் இளைஞர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை கூட தூற்றும் வகையில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜேர்மன் தூதரகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கும் நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் உதவியை கோரி நிற்பதாகவும் இது குறித்த காத்திரமான நடவடிக்கை இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் மலையக தமிழ் இளைஞர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.