இலங்கை மதிப்பில் சுமார் 1428 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு, மறைந்த ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் அவர்களால் வரைந்த பெயரிடப்படாத ஓவியமே, 110.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இது இலங்கை மதிப்பில் சுமார் 1428 கோடி ரூபாய்களாகும்.

இந்த ஓவியம் ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை எடுத்துக் காட்டுகின்றது. இந்த ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய பேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார்.

ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் முந்தைய, மிகவும் விலையுயர்ந்த ஓவியத்தை காட்டிலும், இந்த ஓவியம் சுமார் இருமடங்கு விலைக்கு ஏலம் போயுள்ளது.

ஓவியத்தை ஏலத்தில் எடுத்த தொழில்முனைவர் தனது டுவிட்டர் பக்கத்தில்; தான் ஒரு அதிஷ்டக்காரர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் வரைந்து, விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக ஏலம் போன படைப்பாகும்.

அதுமட்டுமின்றி 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டொலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

புகழ்பெற்ற ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் தனது 28 வயதில் 1988ம் ஆண்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.