முகமாலை துப்பாக்கி சூட்டில் உள்வீட்டு நாடகம் அம்பலம்?

யாழ்ப்பாணம் முகமாலை பகுதியினில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ரணிலது வடக்கு விஜயத்தின் போது விடுக்கப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞை என 55 வது படைப்பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுதலைப்புலிகள் மீளெழுச்சியென குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கையினில் அதனை நிரூபிக்க நடத்தப்பட்ட நாடகமே இதுவென அம்பலமாகியுள்ளது.

நேற்று நள்ளிரவு ஏ9 பிரதான முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவினால் நேரடியாக வழிநடத்தப்பட்ட இரகசிய புலனாய்பு பிரிவினருக்குமிடையே தொடர்புகள் உள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர் ஏ-9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தையடுத்து டோர்ச் லைட் வெளிச்சம் மூலம் அவதானித்துள்ளனர்.அப்போது மூன்றிற்கும் அதிகமான இனந்ததெரியாத நபர்களினை கொண்ட குழு ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் காவல்துறையினர்; மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் கச்சாவெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன. பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் அருகிலுள்ள படைமுகாம் பகுதி நோக்கியே தப்பித்து சென்றிருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.இதன் அடிப்படையினில் விசாரணைகள் தொடர்கின்றது.

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடந்து கொண்டிருந்த போது கிளிநொச்சிக்கு வருகை தந்த சிங்கள இனவாத குழுவொன்று கொடிகளை பறக்கவிட்டு பின்னர் முகாமாலை படைமுகாமினில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையினில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.ரணில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையினில் புலிகள் மீளெழுச்சியடைந்துவிட்டதாக காண்பிக்கவே இத்துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை ஆரமப் கட்ட விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.