அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில், ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான, தங்கள் அமைச்சரவையில் உள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறும், புதியவரது பெயரைத் தமது கட்சி பிரேரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுத்துள்ள நிலையில், கட்சித் தலைவர் என்ற ரீதியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா என்று இரா.சம்பந்தனிடம் வினவியபோது,
இது தொடர்பில், ரெலோ அமைப்போ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும், தற்போதைய நிலையில் இதற்கு என்னால் பதில் கூறமுடியாது எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்புத் திகதி குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.