சோமாலிய கடல் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு, இரு வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்ற கப்பல் சிப்பந்திதான் சரச்சந்திர சூரசேன.
கடந்த ஞயிற்றுக்கிழமை களுத்துறையில் தொடங்கொடவில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
இவர் கடல் கொள்ளையர்களுடனான அனுபவங்களை ஒன்றும் விடாமல் வெற்றுச் சிகரெட் பைக்கெற்றுக்களில் பதிவு செய்து உள்ளார்.
கடல் கொள்ளையர்களால் வீசப்படுகின்ற வெற்றுச் சிகரெட் பைக்கற்றுக்களை இவர் பொறுக்கி எடுத்துப் பத்திரப்படுத்தி, பயன்படுத்தி உள்ளார்.
இவ்வனுபவங்கள் தொடர்பாக தெரிவித்தவை வருமாறு:-
நான் கப்பலில் ஐந்து வருடங்கள் வரை பணியாற்றி உள்ளேன். டுபாய் நாட்டுக் கப்பலில்தான் வேலை. தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 2010 ஆம் ஆண்டு நிலக் கரி கொண்டு சென்றோம்.
எமது குழுவில் 19 பேர் இருந்தனர். இந்தியாவை வந்தடைய இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. ஆனால் நான்காம் நாள் எம்மை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து விட்டனர்.
இவர்கள் பாரிய மீன்பிடிப் படகுகளில் வந்திருந்தனர். எங்கள் கப்பலுக்கு அருகில் படகுகளை நிறுத்தினர். அவசர பாவனைக்கான ஏணிகளூடாக கப்பலுக்குள் குதித்தனர். எம்மை சுற்றி வளைத்தனர். பதிலுக்கு எதுவும் செய்ய அவகாசம் எமக்கு இருக்கவில்லை. அத்துடன் அவர்கள் 40 பேர் வரை இருந்தனர்.
எங்கள் உடைமையில் இருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை முதலில் உடைத்துத் தள்ளினார்கள். எம்மால் எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது. அத்துடன் எமது கையடக்கத் தொலைபேசிகளையும் பெற்றுக் கொண்டனர்.
ரஷயத் என்கிற துறைமுகத்துக்கு கப்பலை ஓட்ட உத்தரவிட்டனர். துறைமுகத்தில் இருந்து 900 மைல்கள் தொலைவில்தான் எமது கப்பல். நாம் அவர்களுடைய கட்டுக்காவலில். கட்டளைக்கு கட்டுப்படுகின்றமையைத் தவிர எமக்கு வேறு வழி இல்லை.
கொள்ளையர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய கப்பலைச் செலுத்திச் சென்றோம். இரு இயற்கைத் துறைமுகங்களை கண்டோம். கடல் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு இருந்த கப்பல்கள் அங்கு நின்றன.
ஒரு நாள் கழிந்தது. எமது கையடக்கத் தொலைபேசிகளை கொடுத்தார்கள். குடும்பத்துடனும், கப்பல் உரிமையாளருடனும் பேசச் சொன்னார்கள். 10 மில்லியன் ரூபாய் கப்பம் கொடுக்கின்ற பட்சத்தில்தான் எம்மை விடுவிப்பார்கள் என்கிற தகவலை சொல்லச் சொன்னார்கள்.
நானும் என் குடும்பத்தினருடன் பேசினேன். கப்பல் உரிமையாளர் லெபனான் நாட்டுக்காரர். எங்களை விடுவிப்பார் என்று உறுதிமொழி தந்தார். பின்னர் கொள்ளையர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பறித்து எடுத்தனர்.
கப்பலை நங்கூரமிட்டார்கள். சீனி, மா ஆகியவற்றை பெரிய பெரிய பைகளில் கப்பலில் குவித்தார்கள். எனவே மிக நீண்ட காலம் கப்பலில் நாம் தங்கி இருக்க நேரும் என்பது எமக்கு விளங்கியது.
வேறு கப்பல்களை கைப்பற்ற முயல்கின்றனர் என்றும் வேறு கப்பல்களை கைப்பற்றுகின்ற பட்சத்தில் எங்களை விடுவிப்பார்கள் என்றும் கொள்ளையர்கள் எங்களுக்கு சொன்னார்கள். ஆனால் வேறு கப்பல்களை கைப்பற்றுகின்ற இவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஏனென்றால் கடல் கொந்தளித்து இருந்தது. கடலுக்குள் சில கொள்ளையர்கள் தவறி விழ நேர்ந்தது.
இன்னொரு நாள் இந்தியாவின் கண்காணிப்பு விமானம் ஒன்று எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
தொழிநுட்ப கோளாறு ஒன்றில் சிக்கி இருப்பது போல் கொள்ளையர்கள் நடித்தார்கள். கப்பலில் இந்தியர்கள் உள்ளார்களா? என்று கேட்கப்பட்டது. இல்லை என்று கொள்ளைக்காரர்கள் சொன்னார்கள். எனவே கடல் எல்லையை விட்டு வெளியேற்அ சொல்லி இந்தியா உத்தரவிட்டது. சொன்னபடி செய்யாவிட்டால் கப்பலை வெடிக்க வைத்து விடுவார்கள் என எச்சரித்தனர்.
சுமார் ஆறு மாதங்கள் அங்கும், இங்கும் என்று கப்பல் அலைந்து திரிந்தது. எங்களை காப்பாற்ற எவருமே வரவில்லை.