Sri Lanka

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பியனுப்ப பிரித்தானிய உயர் நீதிமன்று தடை!- சனல்4

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த ஒரு தொகுதி தமிழர்களை பிரித்தானிய உயர்நீதிமன்றம் புதன்கிழமை தடுத்து நிறுத்தியுள்ளது.

முன்னெப்போதுமில்லாதவாறு உயர்நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது, நாளை வியாழக்கிழமை லண்டனிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு விசேட விமானமொன்றில் இவர்கள் திருப்பியனுப்பப்படவிருந்த நிலையிலேயே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்கள், மற்றும் அவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்துள்ளார்கள் என்ற காரணங்களினால் அவர்கள் தமது சொந்தநாட்டிற்குத் திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அவர்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாகலாம் என்று அவர்கள் சார்பில் வாதாடிய சட்டவல்லுனர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்கள்.

இன்றைய இந்தத் தீர்ப்பானது எதிர்காலத்தில் பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை, இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளிலும், இலங்கையுடனான பிரித்தானியாவின் உறவுகளிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

மேலதிக செய்திகளுடன் எமது வெளிநாட்டுச் செய்தியாளர் ஜொனதன் மில்லர்:

லண்டனின் கிழக்குப் புறத்தில் அமைந்திருக்கும் ஈஸ்ட்ஹாம், தொலைதூரத்தில் தமது இல்லங்களை விட்டுவிலகி இங்கிலாந்தில் தங்கியிருக்கும் சுமார் 1,20,000 இலங்கைத் தமிழர்களின் இல்லமாக விளங்குகிறது.

கடந்த மூன்று வருடங்களிற்கு முன் முடிவுக்குவந்த புரையோடிப்போன இலங்கை யுத்தத்தில், லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன்விளைவாக அதிகரித்த எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இங்கிலாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கின்றனர். ஆனால் புகலிடம் பெறுதல் என்பது மிகவும் கடினமானது. உங்களுக்கு இலங்கையில் உயிராபத்து இருப்பதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அது உங்களால் முடியாதுபோனால் நீங்கள் திருப்பியனுப்பப்படுவீர்கள்.

நாளையதினம் சுமார் 4.00 மணியளவில் பிரித்தானியாவினால் விசேடமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட மற்றுமொரு விமானம் சுமார் 60 புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு ஏற்றிக்கொண்டு செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனைத் தடுத்துநிறுத்த உயர்நீதிமன்றில் இன்று பிற்பகல் மேற்கொண்டிருந்த பகீரதப் பிரயத்தனத்திற்கு பலன் கிட்டியது.

பிரித்தானிய அரசின் இந்த முயற்சிகளை கடுமையான முறையில் நிராகரிக்கும் வகையில் தீர்ப்பினை வழங்கியுள்ள இரண்டு மூத்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், இவர்களை திருப்பியனுப்புவது மிகவும் ஆபத்தானது என்று தீர்பளித்திருக்கிறார்கள். வரலாற்றில் முன்னொருபோதும் வழங்கப்பட்டிருக்காத இந்த அபூர்வமான தீர்ப்பு, ஒரு மேற்கோளாக அமைந்திருக்கிறது.

கடந்த பதினெட்டு மாதமாக சனல் 4 நிறுவனம், இலங்கையில் தமிழர்கள் முகம்கொடுத்துவரும் அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் குறித்து தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டுவருகிறது. முன்னாள் போராளிக்குழுவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர்கள்மீது அங்கு பாரியளவில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களையும், தமிழர்கள் அல்லாத சிலரையும் திருப்பியனுப்புவது தொடர்பில் இருக்கக்கூடிய தனது அணுகுமுறையை பிரித்தானிய அரசாங்கம் பாரதூரமான முறையில் மீள்பரிசீலனை செய்யவேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அண்மையில் பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குப் பலவந்தமாகத் திருப்பியனுப்பப்பட்ட பலர் மிகவும் மோசமான சித்திரவதைக்கும், கொடுமைகளிற்கும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தவறானதொரு நடைமுறையினைக் கடைப்பிடித்து வருகிறது. அதனை இது மிகவும் அவசரமாக, அவசியமாக மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்குப் பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்ட தமிழர்களில் 15 பேர் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதனை இம்மாதம், முதன்முறையாக, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் 15 பேரும் மீளவும் பிரித்தானியாவிற்குத் தப்பி வந்திருக்கிறார்கள், அத்துடன் அவர்களது கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் அனைவரிற்கும் பிரித்தானிய அரசு புகலிடம் வழங்கியிருக்கிறது.

அவர்களில் மலர் என்பவரும் ஒருவர். அவர்கள் என்னை அடிக்கிறதும், உதைக்கிறதும், தண்ணீர், சாப்பாடு தரமறுப்பதும், கழுத்தில துப்பாக்கியை வைச்சுக்கொண்டு கொல்லப்போவதாக மிரட்டிறதும் நான் நாளாந்தம் அனுபவிச்ச கொடுமைகள். அத்துடன் என்னை அவங்கள் பலதடவைகள் கற்பழித்திருக்கிறாங்கள், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறாங்கள். என்னை ஒரு நாயைப் போலத்தான் கேவலமாக நடாத்தினவங்கள்.

ஏன் இவை உங்களிற்கு நடந்தது?

என்னை இஞ்சயிருந்து திருப்பியனுப்பியபடியால்த்தான் நான் இந்த வேதனைகளையும், கொடுமைகளையும் சந்திக்க வேண்டிவந்தது.

இலங்கையின் 27 வருட கால தமிழ் ஆயுதப் போராட்டம் மே 2009ல் முறியடிக்கப்பட்டது. இறுதி மாதங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் மாத்திரம் சுமார் 40,000 ற்கும் அதிகமான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆனால், பிரிவினைக்கான அடிப்படைகளை கூண்டோடு இல்லாதொழிக்க முயன்றுவரும் அரசபடைகளின் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் சர்வாதிகாரப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் அபாயத்தில் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏகோபித்த குரலில் சொல்லுகிறார்கள்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிரித்தானிய அரசின் நீதித்துறைக்கான ஆலோசகரினால் அனுப்பபட்ட கடிதத்தின் பிரதியொன்று சனல் 4 நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது. நாளைய தினம் கொழும்பிற்கு விமானமூலம் திருப்பியனுப்பப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான வழக்குத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை அது அனுப்பியுள்ள கடிதத்தில், இவர்களைத் திருப்பியனுப்புவதால் அவர்களுக்கு ஆபத்துக்களேதும் இல்லை என்று அரசு பிடிவாதமாகத் தெரிவித்திருக்கிறது.

பிரித்தானியா, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் இலங்கை தொடர்பான செய்திகளையும், தகவல்களையும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, ஐ,நா, மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட நம்பிக்கையான பல தரப்புக்களிடமிருந்து பெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பபட்டு சித்திரவதைகளுக்குள்ளான சுமார் 64 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் மூன்று முக்கிய மனித உரிமைகள் அமைப்புக்கள் மரபணுப்பரிசோதனைகளை ஆதாரம் காட்டி வெளியிட்ட சான்றுகளை அது “பொதுப்படுத்தப்பட்ட ஆதாரங்கள்” என்று கூறி நிராகரிக்கின்றது.

அவ்வாறு கூறப்பட்ட சான்றுகள் உண்மையானதாக இருந்தாலும்கூட, கடந்த மூன்று வருடங்களாக பிரித்தானியாவினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் சிறிய தொகையே என்று மிகவும் வியக்கவைக்கும் வகையில் தெரிவித்திருக்கிறது. வேறுவகையில் கூறுவதாயின், இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவோர் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால்கூட, அவை எண்ணிக்கையில் மிகவும் சிறியவையே, என்று அது கூறுகிறது.

ஆனால் இன்று பிற்பகல், உயர் நீதிமன்று அரசின் தீர்மானங்களுடன் வேறுபட்ட முடிவொன்றினை அறிவித்திருக்கிறது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு பாதுகாப்பாகத் திருப்பியனுப்புதல் குறித்து இலங்கை நாட்டிற்கான வழிகாட்டியைப் புதுப்பித்தல் தொடர்பில் பிரித்தானிய நீதிச்சபையொன்று ஈடுபட்டிருக்கிறது. இதன் பின்னணியில் தமிழர்களை மீளவும் அங்கு திருப்பியனுப்புதல் பாதுகாப்பற்றது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் கல்விகற்றுக்கொண்டிருந்த ஷான் என்ற மாணவனை நான் சந்தித்தேன். சுகயீனமுற்றிருந்த தனது உறவினரை பார்வையிடுவதற்காக இவன் கடந்தவருடம் இலங்கை சென்றிருந்தான்.

எனக்கு அவங்கள் மின்சாரம் பாய்ச்சினவங்கள். என்னைப் பொல்லுகளாலும், கம்பிகளாலும் அடிச்சவங்கள், சூடாக்கின இரும்புக்கம்பியால என்ற முதுகைச் சுட்டவங்கள். வேதனை தாங்க முடியாமல் அவங்கள் தந்த கடிதத்தில நான் கையெழுத்து வைச்சனான். அதுக்குப் பிறகு அவங்கள் என்னை ஒரு இருட்டு அறையில வைச்சிருந்தவங்கள்.

இது போன்ற சம்பவங்கள் விடுமுறையில் செல்லும் மாணவர்களுக்கே இடம்பெறுமாயின், புகலிடம் நிராகரிக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் பன்மடங்கு அதிகம் என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். கடந்த மாதங்களில் இவை தொடர்பான செய்திகளை வெளியிடும் வேளைகளிலெல்லாம் இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க நாம் அரசாங்கத்தை அணுகியிருந்தோம்.

குடிவரவு அமைச்சரோ, அல்லது உள்நாட்டமைச்சின் செயலாளரோ இது குறித்து அவர்களைப் பேட்டி காண்பதற்கான சந்தர்ப்பத்தினை ஒரு தடவை கூட எமக்கு வழங்கவில்லை. பதிலாக எமக்கு கிடைத்ததெல்லாம் பாரிய அறிக்கைகள்தான். இம்முறையும் அதற்கு விலக்கல்ல. எமது பாதுகாப்புத் தேவை என்று நாம் கருதும் ஒவ்வொருவருக்கும் புகலிடம் அளிக்க நாம் தவறுவதில்லை. உதாரணமாக, கோரிக்கையாளர்கள் திரும்பிச் செல்லும்வேளையில் அவர்களுக்கு துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் இருக்குமாக நாம் கருதினால் அவர்களுக்கு நாம் புகலிடம் வழங்குவோம் என்று தெரிவிக்கும் அந்த அறிக்கை, எல்லை பாதுகாப்பு முகவரகம் இலங்கையிலுள்ள நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக மறுபரிசீலித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. அந்த மறுசீலனையின்படி, புகலிடம்கோரும் ஒவ்வொருவருக்கும் அதனது பாதுகாப்புத் தேவையில்லை.

உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பினூடாக அரசின் நிலைப்பாட்டை மறுதலித்திருக்கிறது. இந்த வருட இறுதிக்குமுன்னர் வெளியிடப்படவிருக்கும் இலங்கைக்கான பிரித்தானியாவின் வழிகாட்டி, இங்கு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடாத்துபவர்கள் அங்கு திரும்பிச் செல்வது பாதுகாப்பானதா, இல்லையா அல்லது, எந்த இலங்கைத் தமிழரையும் திருப்பியனுப்புவது பாதுகாப்பானதா, இல்லையா என்பதனை வரையறுக்கும்.

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், இன்று திருப்பியனுப்பாது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர் அனைவருக்கும் உடனடியாகவே புகலிடம் கிடைக்கும் என்று அர்த்தப்படாது. அவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படமாட்டாது. இந்த அரசு இந்த மெச்சத்தக்க தீர்ப்பிற்கெதிராக மேன்முறையீடு செய்கிறது. ஆனால், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது மிகவும் மோசமான கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

ஜொனதன் மில்லரின் இன்றைய இந்த செய்தியில் வெளியாகிய சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகத்தினை நாம் தொடர்புகொண்டு கேட்டோம்.

இலங்கைத் தூதரகம் இது குறித்து எமக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,

 

செய்தி வெளியிடப்படுவதற்கு முன்பதாகவே, என்ன அதில் தெரிவிக்கப்படப் போகிறது என்று சரியாகத் தெரிவிக்காமலே, மீண்டுமொருமுறை சனல் 4 தொலைக்காட்சி எம்மிடம் கருத்துக் கோரியுள்ளமை குறித்து நாம் வருந்துகிறோம். உங்களது கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இது உங்களது மற்றுமொரு போலி நாடக அரங்கமாகவே இருக்குமென்ற வாய்ப்புக்களே அதிகம். இந்தச் செய்தி வெளியிடப்படும் சூழ்நிலைகளைக் கருதும்போது, இது சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்க உங்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விஷமத்தான பிரச்சார நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகவே தெரிகிறது, என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Most Popular News