கச்சைத்தீவில் இந்திய கொடியை ஏற்றமுயற்சித்த 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் விடுதலை கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதல் நீடித்தே வருகிறது.
இந்த நிலைக்கு காரணம், கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டதுதான் என குற்றம்சாட்டும் மக்கள் விடுதலை கட்சியினர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தனர்.
இதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சியினரும், ஆதிதமிழர் கட்சியினரும் இன்று காலை ரெயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். இதனால் அங்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
மீனவர்கள் யாரும், போராட்டக்காரர்களுக்கு படகுகளை கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் நீந்தி சென்றாவது கச்சத்தீவில் கொடியேற்றுவோம் என்று போராட்டக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் போராட்டத்திற்கு முருகவேல்ராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர் அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி சென்றனர். அங்கு அவர்களை பொலிஸார் தடுக்க முயன்றனர். இருப்பினும் 40-க்கும் மேற்பட்டோர் தடையை மீறி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தேசிய கொடியை ஏந்தி பிடித்த அவர்கள் இலங்கை ஜனாதிபதியின் உருவ பொம்மை மற்றும் இலங்கை கொடியினை செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் விரைந்து சென்று கடலுக்குள் போராட்டம் நடத்தியவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 350-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.