Sri Lanka

எந்த விசாரணையையும் சிறிலங்கா ஆரம்பிக்கவேயில்லை – சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் உள்ளடக்கம் – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கம்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம், 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல்லிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக நேற்று குறிப்பிட்டிருந்தேன்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ம் ஆண்டு தீர்மானத்தின் மீது இந்த தீர்மானம் கொண்டு வரப்படும்.

இந்தத் தீர்மானம், சிறிலங்கா அரசாங்கத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளும்.

இது தான் தீர்மானத்தின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்.” என்று பதிலளித்துள்ளார்.

மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவொரு விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நீண்ட அறிக்கை சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மையினர் சார்பிலோ, அவர்களின் நலன்சார்ந்தோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா இவற்றை நிராகரித்துள்ள நிலையில், அந்த அறிக்கையுடன் அமெரிக்கா இணங்கிப் போகிறதா, என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த பற்றிக் வென்ட்ரெல்,

“இந்த நீண்ட அறிக்கையை நாம் ஆராய்ந்தோம். ஒரு நாள் அல்லது அதற்கு முன் அந்த அறிக்கை எமக்குக் கிடைத்தது.

ஆனால், சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக எமது பலமான கவலைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

அத்துடன், பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட, சிறிலங்காவில் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வரும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து, இன்று வரை சிறிலங்கா அரசாங்கம் ஒரு முழுமையான நம்பகமான, அல்லது சுதந்திரமான விசாரணைகளை ஆரம்பிக்கவேயில்லை.

நாம் இந்தக் குறிப்பிட்ட அறிக்கையை ஆராய்ந்தோம்.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நாம் உண்மையிலே ஆழமான கவலை கொண்டுள்ளோம்“ என்று தெரிவித்துள்ளார்.

1 total views, 1 views today

Most Popular News