‘பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தெல்லிப்பழையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பது மனவேதனையினைத் தருகின்றது’ என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரணவபவன் தெரிவித்தார்.
‘தெல்லிப்பழையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றதாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இது குறித்து முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரணவபவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கடந்த 15 ஆம் திகதி தெல்லிப்பழையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இனந்தெரியாதோர் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து இருந்தனர். இந்த உண்மைச்சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சம்பவங்களை நானும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்பகுதியில் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்களும் நேரில் பார்த்தோம். இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தேன். இது தொடர்பான முறைப்பாட்டுப் பிரதி என்னிடம் உள்ளது.
இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான வகையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இவரது கருத்து மிக மனவருத்தத்திற்கு உரியது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ‘பொதுமக்கள் பிரச்சினையை கையாள்பவர் என்ற அடிப்படையில், போராட்டத்தை குழப்ப வந்தவர்கள் யார்? ஏன் குழப்ப வந்தார்கள்? என்பதை ஆராய்வதே பொருத்தமானது. ஆனால் பொலிஸ் பேச்சாளர் அதனை விடுத்து பிரச்சினையை திசை திருப்ப முற்பட்டுள்ளார். இது ஒரு போதும் சாத்தியமற்றது.
இலங்கை அரசு கூறும் நல்லிணக்கத்திற்கான அணுகுமுறைகள் இவ்வாறே அமையுமானால் அவர்கள் எண்ணுவது ஒருபோதும் கைகூடப்போவதில்லை. தமிழ் மக்களை துன்புறுத்தி, அடக்கி அதன் மூலம் தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்று அரசு எண்ணுமாக இருந்தால் அதுவும் அரசுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சம்பவம் நடைபெற்றமைக்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கையில் பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பது மனவேதனையினைத் தருகின்றது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
‘குழப்பம் விளைவிக்க முற்பட்டவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர். அவர்களை பொதுமக்கள் கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவர்கள் புகைப்படங்கள் உண்மையா இல்லையா என்பதை இரசாயனப் பகுப்புக்கு உட்படுத்தி உண்மையை அறிந்து கொள்ளலாம்.
இராணுவத் தரப்பு இது தொடர்பில் சரியான பதில் எதையும் அளிக்கவில்லை. இதில் இருந்து மக்கள் உண்மையினைப் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறான நிலமைகளை பார்க்கும் போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் எவ்வகையான ஆட்சி நடக்கிறது என்பது புரியும். நல்லிணக்கம் பற்றி பேசுபவர்கள் அவற்றை உண்மையான வழியில் நடைமுறைப்படுத்தாது தமிழ் மக்களது உரிமைகளை அடக்கி ஒருக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலமை தொடருமானால் எதிர்காலத்தில் அரசு பெரும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்’ என்றார்.