Sri Lanka

சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்புகிறது இந்தியா – அரசியல் அரங்கில் புதிய திருப்பங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்கக் கூடும் என்று புதுடெல்லி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக ஐபிஎன் தொலைக்காட்சி தகவல் வெளியிடுகையில்,

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் நடைமுறைத் தீர்மானமாகவே இருக்கக் கூடும் என்றும், உள்விவகாரத்தில் தலையிடும் தீர்மானமாக இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் அயல்நாடான சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கலாம் என்று கருதப்படுவதற்கு மூன்று காரணங்களை நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

அனைத்துலக சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா போதுமானளவில் நிறைவேற்றவில்லை என்று இந்தியா கருதுகிறது.

இரண்டாவதாக, இந்தியா தலையிடும் வகையிலான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது, இந்தத் தீர்மானம் சிறிலங்காவின் நகர்வுகள் தொடர்பாக அனைத்துலக கண்காணிப்பை கோராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது, தமிழ்நாட்டின் அரசியல் உணர்வுகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம்.

இந்த மூன்று காரணங்களுக்காகவும், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சிறிலங்கா விவகாரத்தில். இந்திய மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களுக்குள் சிக்கியுள்ளது.

இந்தநிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் சிறிலங்கா தமிழர் விவகாரம் குறித்து குறுகிய நேர விவாதம் ஒன்று நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின் போது, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தயாராகி வருகின்றன.

அவர்களுக்கு உதவியாக பாஜக, சிவசேனா, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் உரையாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின்போது, ஜெனிவா தீர்மானம் குறித்த இந்தியா அரசின் நிலைப்பாடு ஓரளவுக்கு வெளிப்படுத்தப்படலாம் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மற்றொரு புதிய திருப்பமாக, நாளை மறுநாள் புதுடெல்லியில் டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்படவுள்ள மாநாட்டில், காங்கிரஸ் கட்சியும் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பச்சைக்கொடி காண்பித்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் குலாம் நபி அசாத் டெசோ கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று சோனியாகாந்தியை சந்தித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 total views, 1 views today