Sri Lanka

ஊழலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

ஸ்ரீலங்காவின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்ர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவை குறித்தும் எந்தவித தகுதி, தராதரமும் பாராது விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த உத்தரவிற்கு அமையவே ஸ்ரீலங்கா பிரதமரின் மிக நெருங்கிய நண்பரான செல்வந்த வர்த்தகர் திருக்குமார் நடேசன் நேற்றைய தினம் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக அரச தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட ”சத்விரு சங்ஹித” உரையில், ஊழல் மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், எப்.சீ.ஐ.டி என்ற பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய இடம்பெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை அவன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவன மோசடி தொடர்பில் நீதிமன்றில் நிறுத்தியதை அருவருப்புடனும், வெறுப்புடனும் பார்ப்பதாக தெரிவித்திருந்த மைத்ரிபால சிறிசேன, இவ்வாறான நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்களை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டு வருவதுடன், முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் மீதான விசாரணைகளால், ஜனாதிபதிக்கும் – அரச படையினருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சதித்திடமொன்றும் இடம்பெறுவதாகவும் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரையால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிருக்கும் – ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், தேசிய அரசாங்கத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

அர்ஜூணன் மகேந்திரன் மத்திய வங்கியில் ஆளுநராக பதவி வகித்த காலப்பகுதியான 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் விற்பனையில் இடம்பெற்ற முாசடிகள் தொடர்பில், பொது நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற செயற்குழுவான கோப் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனும் ஸ்ரீலங்கா பிரதமரின் நெருங்கிய நண்பராவார். இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா பிரதமரின் மற்றுமோரு நெருங்கிய சகாவான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் திருக்குமார் நடேசனின் கைதும் இடம்பெற்றுள்ளது.

பெசில் ராஜபக்ச தொடர்புபட்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த மல்வான பிரதேசத்திலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை தொடர்பிலேயே திருக்குமார் நடேசன் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவற்றை ஜனாதிபதி எப்.சீ.ஐ.டி யிடமும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமும் ஒப்படைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, இதன்போது எவரது தலையீடுகளுக்கும் அடிபணியாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டிருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular News