Sri Lanka

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!! இறுதிக்கட்டப் பேச்சு பெல்ஜியத்தில்…

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்தற்கான இறுதிக்கட்டப் பேச்சுக்கள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸிற்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர் மட்டத் தூதுக் குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டு இறுதிக்கும் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரசல்ஸிற்கு விஜயம்செய்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பெல்ஜியத்தின் இளவரசர் லொவ்ரானுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

மீள்புதுப்பிக்கக்கூடிய சக்தி நிலையத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் மன்னர் பிலிப்பின் இளைய சகோதரரான லொவ்ரா் இளவரசர் இயற்கை வள, நிரந்தரமான முகாமைத்துவம் மற்றும் தூய சக்தி வளத் தொழில்நுட்பத்திற்கான நிலையத்தின் தலைவராகவும் கடமையாற்றுகின்றார்.

இதற்கமைய பெல்ஜியத்தில் நடைமுறையிலுள்ள மீள்புதுபிக்கக்கூடிய தூய சக்தி வலுப்பய்பாடு தொடர்பிலேயே பிரதமர் ரணிலுக்கும் – பெல்ஜிய இளவரசர் லொவ்ரானுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமாக கவனம்செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அணுமின் நிலையங்களைக் கொண்டே பெல்ஜியத்தில் தற்போது மின் தேவை பூர்த்திசெய்யப்படுகின்ற போதிலும், எதிர்காலத்தில் மீள்புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இளவரசர் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற கட்டடத்தொகுதி 120 வருடங்கள் பழமையானது என்றும், இந்தக் கட்டடத்திற்கான மின்சாரமும் மீள்புதுப்பிக்கக்கூடிய மின் வலுவைக் கொண்டே பயன்படுத்தப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரசல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஸ்ரீலங்கா பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றைய தினம் மூடிய அறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றத் தவறியமை ஆகியவற்றை முன்வைத்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிகாலமான 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஸ்ரீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச்செய்திருந்தது.

இதனால் ஸ்ரீலங்காவிற்கு ஏற்றுமதி வருமானம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததுடன், ஸ்ரீலங்காவின் மொத்த தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்துவந்த தைத்த ஆடை ஏற்றுமதி கைத்தொழிலும் பெரும் பின்னடைவை சந்தித்தன. இதனால் பல தைத்த ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதுடன், ஆயிரக்கானவர்கள் தொழில்களை இழக்கவும் நேரிட்டது.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து மைத்ரி – ரணில் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

இதன் இறுதி முயற்சியாகவே ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தற்போது களத்தில் குதித்திருக்கின்றார்.

இதற்காகவே தற்போது பெல்ஜியத் தலைநகர் பிரசல்சிற்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.eu

Most Popular News