Sri Lanka

கோத்தா படைமுகாமை இழுத்து மூட கோரிக்கை!

கடற்தொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஏதுவாக முள்ளிவாய்க்காலில் உள்ள கோத்தா படைமுகாமை இழுத்து மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வகையினில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி கடற்றொழிலாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், அமைந்துள்ள கோட்டாபய முகாமை நிரந்தர முகாமாக அமைக்கும் நோக்கில், அந்தக் காணியை சுவீகரிப்பதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நிலஅளவீடு செய்ய முற்பட்ட போது, மக்கள் எதிர்ப்பினால் நிலஅளவீடு கைவிடப்பட்டது.

அதன் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியன்று, பொலிஸாரின் பாதுகாப்புடன் நிலஅளவீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது, அன்றைய தினமும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அளவீடு செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனையடுத்து, குறித்த காணியை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக, ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக கடந்த மாதம் 19ஆம் திகதியன்று, கடற்படையினரின் கோரிக்கை சமர்பிக்கப்பட்டபோது, ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்தனர். இதில் உள்ள கடற்படைமுகாம் முற்றாக அகற்றப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும் எனவும் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை தெரிந்ததே.

Most Popular News