Sri Lanka

கல்லூரி மாணவியை லாட்ஜில் அடைத்து பாலியல் பலாத்காரம்; பரபரப்பு தகவல்கள்

கல்லூரி மாணவியை லாட்ஜில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த காதலன், முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி

குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த 19 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, வாரத்தின் இறுதி நாட்களில் தனது வீட்டுக்குச் செல்வது வழக்கம். கடந்த 13-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி அதன்பிறகு என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்லை.

இதுபற்றி மாணவியின் தந்தை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணை சிலர் அடைத்துவைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடசேரி போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தியபோது லாட்ஜின் ஒரு அறையில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் இருப்பது தெரிந்தது. அவர் களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு தகவல்கள்

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

பிடிபட்ட பெண் தக்கலை போலீசாரால் தேடப்படும் கல்லூரி மாணவி என்பதும், அவரை லாட்ஜில் அடைத்து வைத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் குழித்துறையைச் சேர்ந்த பிரஜித் என்ற சுரேஷ் (வயது 27), வடசேரியை சேர்ந்த தினேஷ் (25), அருகுவிளையைச் சேர்ந்த கோபால் (47). இதில் பிரஜித் பயணிகள் வேனில் டிரைவராக வேலை செய்துவந்தார். இவர் நாகர்கோவிலுக்கு வரும்போது மது அருந்துவது வழக்கம். அப்போது அவருக்கு கோபால், தினேஷ் ஆகியோர் நண்பரானார்கள்.

கல்லூரி மாணவி ஊருக்கு செல்வதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது பிரஜித் பழக்கமானார். பின்னர் பிரஜித் அந்த மாணவியிடம் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினார். இதை மாணவி உண்மை என நம்பினார்.

உல்லாசத்துக்கு அழைப்பு

கடந்த 13-ந் தேதி கல்லூரியில் இருந்த மாணவியை, பிரஜித் வெளியே அழைத்து வந்தார். அவரை குழித்துறை ரெயில் நிலையத்துக்கும், மறுநாள் காலை நாகர்கோவிலுக்கும் அழைத்து வந்தார். திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதுவரை லாட்ஜில் தங்கி இருக்கலாம் என்றும் ஏமாற்றி மாணவியை லாட்ஜூக்கு அழைத்து சென்றார்.

திருமணத்துக்கு 5 பவுன் தாலியும், தலா ஒரு பவுனில் 2 வளையல்களும் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று கூறிய பிரஜித் செலவுக்கு பணம் தேவைப்படுவதாக மாணவி அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் தோடுகளை வாங்கி ஒரு கடையில் அடகுவைத்தார். பிரஜித் மாணவியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

4 பேர் பலாத்காரம்

உடனே பிரஜித் மாணவியின் வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் செல்போன் மூலம் தனது நண்பர்கள் கோபால், தினேஷ் மற்றும் ஞானபிரபின் ஆகிய 3 பேரையும் வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து கத்தியைக்காட்டி மிரட்டி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரியவந்தது.

போலீசார் 417 (ஆசைவார்த்தை கூறுதல்), 406 (நம்பவைத்து ஏமாற்றுதல்), 506 (2) (கத்தியைக்காட்டி மிரட்டுதல்), 342 (அறையில் அடைத்து வைத்தல்), 376 (பாலியல் பலாத்காரம்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரஜித், தினேஷ், கோபால் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய ஞானபிரபினை தேடி வருகிறார்கள்.

போலீஸ்காரர்

பிரஜித் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. கோபால் போலீஸ்காரராக பணியாற்றியவர். ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவர்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பகத்தில் தங்கவைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய நகைகளை போலீசார் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Most Popular News