Sri Lanka

வைரத்துக்கு ஆசைப்பட்ட மூதாட்டி..! சிக்கினார் இப்படி…

சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை மூதாட்டி ஒருவர் திருடினார். அவரை பேரன் மூலம் போலீஸார் கைது செய்து வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர், ஆதித்யா நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவருடைய மனைவி சைலஜா. கடந்த 16-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனார்த்தனரெட்டி குடும்பத்தினருடன் வந்தார்.

திருமணம் முடிந்த பிறகு குடும்பத்தினருடன் தி.நகருக்கு சென்றார், ஜனார்த்தனரெட்டி. அங்கு உஸ்மான்சாலையில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றனர். தீபாவளியையொட்டி கடையில் கூட்டம் அலைமோதியது.

டிரஸ் எடுத்து விட்டு தி.நகரிலிருந்து அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பி வந்தனர். அப்போது சைலஜா, கைப்பையை திறந்துபார்த்தபோது 15 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமாகி இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சைலஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

உடனடியாக ஜவுளிக்கடை மற்றும் அந்தப்பகுதியில் தீபாவளிக்காக பொருத்தப்பட்டுள்ள 200 சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீஸார் துல்லியமாக ஆராய்ந்தனர். அப்போது பச்சை நிற சேலை அணிந்த ஒரு பெண், சைலஜா அருகில் வருவதும், பிறகு அங்கிருந்து செல்வதுமாக இருந்தது தெரியவந்தது. அந்த பச்சை நிற சேலை அணிந்த பெண்ணின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

தொடர்ந்து ஒவ்வொரு சி.சி.டி.வி கேமரா பதிவிலும் அந்த பெண்ணை கண்காணித்தனர். ஒருகட்டத்தில் சைலஜாவிடம் அதிகமாக நெருங்கிய அந்தப்பெண், எதையோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண், மயிலாப்பூரை சேர்ந்த மேரி என்று தெரிந்தது. அவரைப்பிடித்து போலீஸார் விசாரித்த போது நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் வைர நகைகளையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சி.சி.டி.வி கேமரா பதிவில் சைலஜா அருகில் வரும் பெண், மயிலாப்பூரை சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது. இவர் மீது 2006-ல் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும், 2011-ம் ஆண்டு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது. இதனால் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் எங்களால் குற்றவாளியை கைது செய்ய முடிந்தது. ஜவுளிக்கடையில் சைலஜா பணம் செலுத்தும்போது மேரியும் அவருக்குப் பின்னால் நின்று பணம் கட்ட நிற்பதைப் போல நின்றுள்ளார்.

பிறகு அவரிடம் சைகை மூலம் பேசிய மேரி, சைலஜாவின் கவனத்தை திசை திருப்பியுள்ளார். இந்த சமயத்தில்தான் சைலஜாவின் தோளிலிருந்து ஹேண்ட் பைக்கை மேரி திருடி விட்டு நைசாக கிளம்பியுள்ளார். அவரிடமிருந்து ஒரு ஜோடி வைர வளையல், ஒரு ஜோடி வைரத் தோடு மற்றும் ரூபி கல்பதித்த நெக்லஸ் ஆகியவை பறிமுதல் செய்துள்ளோம். இதன்மதிப்பு 15 லட்சம் ரூபாயாகும்” என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சி.சி.டி.வி கேமரா பதிவில் இருந்த மேரியின் முகவரி தெரியாததால் போலீஸார் அவரைப்பிடிக்க முடியாமல் முதலில் திணறினர். அப்போது, மேரியின் பேரன் சென்னை சாந்தோமில் உள்ள பிரபல பள்ளியில் படிப்பதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பள்ளிக்கு விரைந்த போலீஸ், அந்த மாணவனிடம் விசாரித்தனர். அப்போது அவன், மயிலாப்பூர், முத்துநகர் என்ற முகவரியை போலீசிடம் தெரிவித்துள்ளான். உடனடியாக அங்கு சென்ற போலீஸார், மேரியைப் பிடித்து விசாரித்தனர். அங்கிருந்து வைர நகைகளை பறிமுதல் செய்தனர். மேரி, வாய் பேச முடியாதவர். இதனால் சைகை மூலமாகவே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வாய் பேச முடியாததை திருட்டு தொழிலுக்குப் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்” என்றனர்.

Most Popular News