Sri Lanka

சுவிஸ் இளைஞர்களுக்கு பொலிசார் அதிரடி எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் காதல் வலை வீசி இளைஞர்களை குறி வைத்து பணம் பறிக்க இளம்பெண்கள் முயற்சித்து வருவதால் வாலிபர்கள் உஷாராக இருக்கும்படி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸில் உள்ள சூரிச் நகர பொலிசார் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இணையத்தளம் மூலமாக 26 வயதான வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவருடன் உரையாடியுள்ளார்.

பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாலிபர் குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் ‘உங்களுடன் உரையாடிய பெண்ணின் தோழி நான். உங்களை சந்திக்க என்னை மட்டும் அனுப்பி வைத்தார்’ எனக் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய வாலிபர் அவருடன் ஒதுக்குப்புறமான ஓர் இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, திடீரென அப்பெண் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெண்ணின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் உடனடியாக துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த வாலிபர் கத்தி கூச்சலிட்டுள்ளார். வாலிபரின் அலறலை கேட்டு சிலர் அங்கு வந்தபோது பெண் துப்பாக்கியை மறைத்துள்ளார்.

பின்னர், ‘இந்த வாலிபர் என்னை கற்பழிக்க முயல்கிறார். என்னை காப்பாற்றுங்கள்’ என அப்பெண் நாடகமாடியுள்ளார்.

ஆனால், சந்தேகம் அடைந்த கும்பல் பெண்ணை கட்டிப்போட முயற்சித்தபோது அவர்கள் மீது பெண் மிளகாய் தூளை வீசி தப்ப முயன்றுள்ளார்.

எனினும், இச்சம்பவம் அறிந்து வந்த பொலிசார் அப்பெண்ணை கைது செய்தனர். மேலும், அவரை அனுப்பி வைத்த 18 வயதான இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதேபோன்று 22 வயதான நபரை அழைத்துச்சென்று துப்பாக்கி முனையில் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இளம்பெண்களின் நடவடிக்கையை அறிந்து அதிர்ச்சி அடைந்த பொலிசார் ‘பணம் பறிப்பதற்காக ஆசை வலையை வீசி இளம்பெண்கள் முயற்சித்து வருவதாகவும், வாலிபர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்’ என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Most Popular News