Sri Lanka

சுமணரத்ன தேரர் – ஞானசாரர் இணைவு இனக்கலவரத்திற்கான அடித்தளம்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியாக வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் ஞானசாரர் தலைமையிலே பொதுபல சேனாவைக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டை குழப்பி சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை சீரழிக்க மதவாதிகளும் இனவாதிகளும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களால் கொண்டு வரப்பட்ட இந்த நல்லாட்சி அரசு இவ்வாறான இனவாதிகளையும் மதவாதிகளையும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பௌத்த சிங்கள மக்கள் தமது தொழிலை எந்த ஒரு தடையும் இன்றி செய்து வருவதோடு பௌத்த மத வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பில் உள்ள சிங்கள மக்களுக்கு பிரச்சினை இருப்பது போல வெளிக்காட்டி இதன் மூலம் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க முற்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Most Popular News