Sri Lanka

லசந்த கொலை விசாரணையில் திடீர் திருப்பம்

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாலேயே சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதாக நம்பப்பட்டு வந்த நிலையில், கனமான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் இன்று (திங்கட்கிழமை) கல்கிஸை நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவமானது முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன தலைமையிலான குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கபில ஹெந்தவிதாரனவின் தலைமையில் இயங்கி வந்த இக் குழுவானது ஐந்து சிம் (sim card) அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களின் தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய அனைத்து தொடர்பாடல்களுக்கும் குறித்த தொலைபேசி அட்டைகளையே பயன்படுத்தியுள்ளமை தமது விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உபாலி தென்னக்கோன், கீத் நொயார் போன்ற ஊடகவியலாளர்கள் மீதான ஏனைய தாக்குதல் சம்பவங்களிலும் ஹெந்தவிதாரனவின் குழுவினர் தொடர்புபட்டிருப்பதாகவும் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Most Popular News