Sri Lanka

ஊர்காவற்றுறை கர்ப்பிணிபெண் கொலை; கணவனிடம் டி.என்.ஏ. பரிசோதனை

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் அயல் வீட்டுக்காரர் ஆகியோரின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவரின் இரத்த மாதிரிகளை பெற்று அதனை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்ததுடன் வழக்கு விசாரனையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தபட்டிருந்தனர்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் அவர்களது அயல் வீட்டு உரிமையாளரும் நீதிமன்ற அழைப்பின் பெயரில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது ஊர்காவற்றுறை பொலிஸார் வழக்கு தொடர்பான விசாரனையை முன்னெடுத்து செல்வதற்கு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரதும் அயல் வீட்டு உரிமையாளரது டி.என்.ஏ மாதிரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான கட்டளையை நிதிமன்றம் பிறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அயல் வீட்டு உரிமையாளரிடம் டி.என்.ஏ மாதிரியை பெற்றுக்கொள்வதற்கான சம்மதத்தை நீதிமன்றம் பெற்றுக்கொண்டதுடன்

குறித்த இருவரையும் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இரு நபர்களிடமும் பெற்றுக்கொள்ளும் டி.என்.ஏ இரத்த மாதிரியை உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ கையளிக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Most Popular News