Sri Lanka

வயிற்றில் கரு.. செரீனா வில்லியம்ஸ் என்ன செய்தார் தெரியுமா?

ஸ்னாப்சாட் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இம்முறை அதற்குக் காரணம் அதன் அதிபரல்ல, அதில் வெளியான பிரபல டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸின் புகைப்பட போஸ்ட். கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப்போட்டியில் தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸை வென்று 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதுவரை 22 கிராண்ட்ஸ்லாம்களை வென்று ஸ்டெப்பி கிராஃபின் சாதனையுடன் சமன் செய்திருந்தார் செரீனா. இந்த வெற்றியின் மூலம் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்கிற பெயரையும் பெற்றார். 6-4,6-4 என்கிற நேர்செட்களில் வீனஸை தோற்கடித்தாலும் அது ஒரு கடுமையான மேட்ச் என்றே சொல்லலாம்.

செரீனா நேற்று இரவு வெளியிட்ட ஸ்னாப்சாட் படத்தில் ”20 வாரங்கள்” என்று கேப்ஷன் இட்டிருந்தார். பிரபல ’ரெட்டிட்’ இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்ஸ் ஒஹானியனுடன் கடந்த டிசம்பர் மாதம் செரீனாவுக்கு நிச்சயம் ஆகியுள்ளது. இந்நிலையில் “20 வாரங்கள்” என மேடிட்ட வயிற்றுடன் போஸ் கொடுத்துள்ளதின் மூலம் அவர் கர்ப்பம் என உறுதியாகிவிட்டது. இந்த விஷயம் அவரது ரசிகர்களிடையே செம வைரலாகப் பரவியது. அந்தப் படத்தில் ஆளுயரக் கண்ணாடியின் முன்னாள் நிற்கும் செரீனா மஞ்சள் நிற சிங்கிள் பீஸ் பிகினி அணிந்திருக்கிறார். வழக்கமாக கட்டுடலாக இருக்கும் அவர் இப்படத்தில் கர்ப்பமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் படத்தை சிறிது நேரத்தில் அவர் அகற்றிவிட்டார். இது வழக்கமாக எல்லா செலிபிரட்டியும் செய்யும் வேலைதான் என்றாலும் விஷயம் மீடீயா- சோசியல் மீடியா என அனைத்திலும் பரவி விட்டது.

இப்போது இன்னொரு அதிசயத்தகவலும் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தான் 20 வாரக் கர்ப்பம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் செரீனா. செரீனா வில்லியம்ஸ்அப்படியென்றால் இந்த வாரத்துடன் அந்தப் போட்டிகள் முடிந்து 11 வாரங்கள் ஆகின்றது. ”வாவ்..9 வாரக் கருவை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பையை வென்றுள்ளார்” என “மெடிக்கல் மிராக்கிள்” டைப் ஆச்சர்யங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அந்தத் தொடர் நடந்த 20 நாட்களிலும் அவர் கர்ப்பமாகத்தான் இருந்துள்ளார். கர்ப்பத்துடனே அத்தனைப் போட்டிகளிலும் கலந்து வென்றுள்ளார் என நினைத்தாலே ஆச்சரியமளிக்க கூடியதாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஸ்போர்ட்ஸ் செலிப்பிரட்டிகள் தொடங்கி,பெண்ணியவாதிகள்,ரசிகர்கள், அமெரிக்க சினிமா செலிபிரட்டிகள் என வகைதொகை இல்லாமல் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் செரீனாவுக்கு போட்டியாளராக இருந்த மரியா ஷரபோவா பிறந்தநாளான நேற்று அறிவித்து இருப்பது தங்களை டீஸ் பண்ணத்தான் என ஷரபோவா ரசிகர்கள் கண்ணை கசக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. காரணம், ஊக்க மருந்து தடைக்கு பிறகு ஷரபோவா தற்போதுதான் விளையாட வந்திருக்கிறார்.

அதே போல் அந்தப் படம் அகற்றப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக செரீனா தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை எனவே இது ‘சும்மா லுலுலாயி’ என்று ஒரு குரூப் சொல்லித்திரிந்தது. உலக டென்னிஸ் சங்கமும் தமது டிவிட்டர் அக்கௌண்டில் தெரிவித்த வாழ்த்தை நீக்கியது. இவற்றையெல்லாம் சொன்னாலும் செரீனாவின் அந்தப் படம் ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டு வெளியாகிவிட்டது. ஒட்டு மொத்த அமெரிக்காவும் பிரபல பாடகி பியான்ஸின் சோசியல் மீடியாவை ரெப்ரஷ் செய்தபடியே இருந்தனர். காரணம் அவர்தான் செரீனாவின் திக்கெஸ்ட் தோழி. இன்னொரு விஷயம்.. பியான்ஸும் தற்போது கர்ப்பமாக உள்ளார். பின்னர் ஒரு வழியாக செரீனா செய்தித்தொடர்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

உலகில் முதல் முறையாக டென்னிஸ் போன்ற கடுமையான ஆட்டத்தை இரண்டுமாத கருவுடன் விளையாடி வென்றுள்ளார்  செரீனா!

Most Popular News