மேற்குலக நாடுகளின் கோடிக்கணக்கான டொலர்களை பெற்றுக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிராக செயற்படுபவர்களை அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாத்ததும்பர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுநிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பாரிய அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். எனினும் தற்போது பல்வேறு பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போருக்கு முன்னர் போன்று தற்போதும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எங்காவது பெரிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கப்பட்டால், அது ராஜபக்ஷவினருடையது என்கின்றனர். ஒரு கட்டடம் ராஜபக்ஷவினரது என பிரசாரம் செய்யப்பட்ட போது, அதன் உரிமையாளர் அந்த கட்டடத்தில் தனது பெயரை காட்சிப்படுத்தினார். இப்படி சேறுப்பூசுவது அரசியல் அல்ல. அது அரசியல் வங்குரோத்து நிலை. சேறுப்பூசி அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு நன்மையளிக்கும் சேவைகளை செய்ய வேண்டும். இதில் ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்பது முக்கியமல்ல எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.