Sri Lanka

வெள்ள நிவாரண பொருட்களை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு திருப்பி அனுப்பிய குஞ்சுக்குளம் கிராம மக்கள்!

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கபட்டிருந்த குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் எமது கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப் பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகவும் குஞ்சுக்குளம் பங்குத் தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.
முசலி பிரதேசத்திற்கு 35 படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் சில பொருட்கள் எமக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் போது மன்னார் மாவட்டத்தினால் எமக்கு தெரிவிக்கப்பட்ட தொகைகளையும் விட மிகவும் குறைவான உலர் உணவு பொருட்களே எம்மை வந்தடைந்தன. இதற்கு குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றை திருப்பி அனுப்பி மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அவை தற்போது மன்னாரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Most Popular News