சீனாவில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர், சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டில் பயணம் மேற்கொண்ட மில்லியனாவது சுற்றுலாப் பயணியாக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஜியாங் யிங் என.ற இந்தப் பெண் நேற்று முன்தினம் இரவு பெய்ஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தார்.
இவர் சிறிலங்கா மரபுப்படி, வரவேற்கப்பட்டதுடன் பின்னர், கண்டிய வழக்கப்படி புடவை அணிந்தும் காட்சி கொடுத்தார்.
யுஎல்-889 விமானத்தில் இந்தப் பெண் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் வந்திறங்கினார்.
அதேவேளை, இந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, இரவு 8.20 மணியளவில் சென்னையில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் தரையிறங்கியிருந்தது.
அதேவேளை, இரவு 10.15 மணியளவில் சென்னை, பெங்களூர் நகரங்களில் இருந்தும் இரு விமானங்கள் தரையிறங்கியிருந்தன.
எனினும் சீனப் பயணியே மில்லியனாவது சுற்றுலாப் பயணி என்ற வாய்ப்பைத் தட்டிச் சென்றுள்ளார்.
இதனிடையே, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் 165 வீதத்தினால் திடீரென அதிகரித்திருந்தது.
இந்தநிலையில் சீனர்களை மேலும் அதிகளவில் சிறிலங்காவுக்கு வரவழைக்கும் பரப்புரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அதேவேளை, இந்தக் காலப்பகுதியில், 1இலட்சத்து 57 ஆயிரம் இந்தியர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும், சீனர்களைக் கவரும் நோக்கிலேயே மில்லியனாவது சுற்றுலாப் பயணியாக சீனப் பெண் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
2013ம் ஆண்டில் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சிறிலங்கா அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.