சிறிலங்காவில் பிரதம நீதியரசரை பதவி நீக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியேலா கனூல் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான விசாரணைகளில் நியாயமான ஒரு விசாரணைக்கான அடிப்படை தன்மைகள் எவையும் காணப்படவில்லை.
ஒரு நியாயமான விசாரணைக்குரிய அம்சங்கள் மதிக்கப்படாத நிலையே காணப்பட்டது.
சிறிலங்காவில் நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் கூடுதலான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகின்ற சம்பவங்கள், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடும் என அவர் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்மையில் சிறிலங்காவில் நிர்வாகத்துறையும், நாடாளுமன்றமும் பிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அத்தகைய நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
பிரதம நீதியரசர் மீதான இத்தகைய நடவடிக்கை சிறிலங்காவில் நீதித்துறை மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதலில் உச்சகட்டம் என்றே எண்ணுகிறேன்.
கடந்த சில மாதங்களில் சட்டத்தரணிகள் மீது தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் அதிகரிப்பு நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கின்றன.
சிறிலங்கா அரசியல் யாப்பின் 107 ஆவது சட்டப் பிரிவு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் உத்தரவு ஆகிய இரண்டையும் இணைத்து பார்க்கும் போது, அவை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு புறம்பானவையாக காணப்படுகின்றன.
இந்த விடயம் 2003 ஆம் ஆண்டே மனித உரிமைகள் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் அவற்றை நிவர்த்திக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறிலங்காவில் நீதிபதிகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை தவிர்க்கவும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றம் தேவை.
நாட்டில் ஒவ்வொரு துறையும் தனி அதிகாரத்துடன் செயல்படும் வகையிலும், சர்வதேச மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது அது சுயாதீனமான ஒரு ஆணையத்தால் நேர்மையாக நடத்தப்பட்டு, அது மதிக்கப்பட வேண்டும்.
நீதித்துறை எந்த விதமான வெளி அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், தலையீடுகள் இல்லாத வகையில் செயற்பட சிறிலங்கா அரசே வழி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் நீதியரசர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தமது பதிலை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சின் சார்பாக பேசவல்ல சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இது குறித்து ஊடகங்களுக்கு விபரிக்கையில், எதிர்வரும் சில தினங்களில் தமது விளக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பவுள்ளதாக கூறினார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பில் முழுமையான விடயங்களை ஆராயாமல் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பேச்சாளர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.