கரையொதுங்கிய இராட்சதத் திமிங்கிலங்கள்!! சுனாமி அச்சத்தில் மக்கள்

இந்தோனேஷியாவின் ஆச் மாகாணத்திலுள்ள உஜாங் கரெங் கடற்கரையில், இராட்சதத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அதனால் மக்கள் சுனாமி அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமிங்கிலங்கள் கரையொதுங்கிய தகவல் அறிந்ததும், கடல்வளம் மற்றும் மீன்வளத்துறை தலைமையதிகாரி நூர் மஹ்தி என்பவர், திமிங்கிலங்களைக் காப்பாற்றி, கடலுக்குள் கொண்டு செல்லும் மீட்புப் பணியில் இறங்கினார்.

அவருக்கு உதவியாக நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் திமிங்கிலங்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் கரையில் ஒதுங்கி, நீந்த முடியாமலிருந்த திமிங்கிலங்களின் மீது தண்ணீரைக் கொட்டி, அவற்றின் உடலைக் குளிர்வித்தபடியே, படகுகளின் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. அவற்றில் காயமடைத்திருந்த நான்கு திமிங்கிலங்கள் உயிரிழந்தன.

ஏனைய திமிங்கிலங்கள் நடுக்கடலுக்குள் கொண்டு சென்று விடப்பட்டன. இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்குள்ள மக்கள்,மீட்புக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

ஸ்பெர்ம் வகை திமிங்கிலங்கள் சராசரியாக 52 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இதுகுறித்து நூர் மஹ்தி குறிப்பிடுகையில், “;இவ்வகைத் திமிங்கிலங்கள் குழுவாகப் பயணிக்கும்போது, தலைமையிலிருக்கும் திமிங்கிலம், ஏதேனும் உடல்நலக்குறைவின் காரணமாகத் தவறுதலாகக் கரையொதுங்கினால், மற்றவைகளும் கரையொதுங்க வாய்ப்புள்ளது அல்லது நிலநடுக்கம், சுனாமி போன்ற அதிர்ச்சியை உணர்ந்திருந்தாலும், திமிங்கிலங்கள் வழி தவற வாய்ப்புள்ளது”; என்றார்.

திமிங்கிலங்கள் கரையொதுங்கியதை அடுத்து, சுனாமி பயத்தால் பீதியடைந்துள்ளனர்.