கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படல.. உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆசிய நாடு!

உலகமே கொரோனாவால் நடுங்கிக்கொண்டிருக்க ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் கொரோனாவை தோற்கடித்து வியட்நாம் விரட்டி சாதனை படைத்துள்ளது.

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு என்பது அதிகமாக இருந்தது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும், ஆசிய கண்டத்திலும் இதனுடைய உயிரிழப்பு அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதே ஆசிய கண்டத்தில் இருக்கக்கூடிய வியட்நாமில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகவில்லை என்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் எல்லையை பகிர்ந்து இருக்கக்கூடிய மிக குட்டியான நாடான வியட்நாமில், 10 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட இந்த குட்டி நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 409 தான். அதில் 369 பேர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தென்கொரியாவை போல் சற்று முன்னதாகவே வியட்நாம் நாடு விழித்து கொண்டது. ஆரம்பக்கட்டம் முதலே விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு தங்களது நாட்டிற்குள் புதிதாக வருபவர்களை கடுமையான பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதித்து.

அதன் பிறகு 14 நாட்கள் கட்டாய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோல் அங்குள்ள பொதுமக்களும் சிறிதளவு உடல் வெப்பநிலை கூடினாலும் அருகில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்திற்கு சென்று பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.

வியட்நாம் அரசும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிற நாடுகளை நம்பாமல் தாங்களே மலிவான விலையில் கொரோனாவுக்கான கிட்டை தயார் செய்து பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்த பரிசோதனையில், யாருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை.

இதையடுத்து கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்படாத நாடாக வியட்நாம் உருவாகியுள்ளது.

கொரோனாவை விரட்டுவதற்கு ஊரடங்கு ஒன்றை மட்டுமே வியாட்நாம் கையில் எடுத்ததாகவும், அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததன் விளைவே, தற்போது கொரோனாவை விரட்டி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு மக்களின் படிப்பறிவும், அரசுக்கு அவர்கள் ஒத்துழைத்து உதவி செய்ததுமே ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல், அவர்கள் தோற்கடிப்பட்டதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது கியூபாவை தாண்டி அதிக அளவில் பேசப்படக் கூடிய ஒரு சிறிய நாடாக வியட்னாம் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.