கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு 18 வருட சிறைத்தண்டனை?

இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை வழங்குமாறு Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் எம்.வீ சன் சீ கப்பலின் ஊடாக கனடாவுக்கு 492 இலங்கை அகதிகளை அழைத்து சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் குணரோபின்சன் கிறிஸ்துராஜா என்ற இலங்கையர் பிரதான குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மனித கடத்தல் தொடர்பில் கிறிஸ்துராஜாவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவரது ஆரம்ப விசாரணையின் போது, கிறிஸ்துராஜா ஒரு புகலிட கோரிக்கையாளராக அவரது மனைவியுடன் சன் சீ கப்பலில் பயணம் செய்தார் என நீதிமன்றில் கூறப்பட்டது.

மனிதாபிமான காரணங்களுக்காக கிறிஸ்துராஜா அந்த கப்பலில் பயணித்ததாகவும், புகலிடம் கோரி சென்றவர்கள் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக சென்றதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும் கிறிஸ்துராஜா அந்த கப்பலின் உரிமையாளர் மற்றும் பயணத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் என்றும் Crown நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கனேடிய உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன் போது கிறிஸ்துராஜாவுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை பொருத்தமானது என அரச வழக்கறிஞர் Charles Hough குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை இன்றைய தினமும் தொடர்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.