கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்

கிளிநொச்சி - கனகாம்பிகை குளத்தினை மேச்சல் தரவையாக பயன்படுத்தும் கால்நடை பண்ணையாளர்கள் புல் வெட்டி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்றைய தினம்(24) எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கடும் வறட்சியான நிலையில் கால்நடை வளர்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மேச்சல் தரை இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் பண்ணை வளர்ப்பிற்காக மேச்சல் தரைகள் ஒதுக்கி கொடுக்கப்படாத நிலையில் குளங்கள், சமதரைகள் போன்றவற்றில் பண்ணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குளக்கட்டின் அபிவிருத்திக்காக புற்கள் அணையின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கான புல்கற்றைகளை பெற்றுக்கொள்வதற்கு சில பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கனகாம்பிகை குளத்தில் புல் கற்றைகள் பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த ஒப்பந்தகாரர்களிற்கு பண்ணையாளர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமது கால்நடை வளர்ப்பிற்கு பொருத்தமான பகுதிகளை அடையாளப்படுத்தி தருமாறும், குறித்த குளத்தினை 7 கிராமங்களை சேர்ந்த பண்ணையாளர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, பொருத்தமான மேச்சல் தரை இல்லாமையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.