கண்டி வன்முறை சம்பவம்! பிரதான சந்தேகநபர் அலுவலகத்திலிருந்து பெற்றோல் குண்டுகள் மீட்பு

கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அமித் ஜீவன் வீரசிங்க என்பவரின் அலுவலகம் இன்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த அலுவலகத்திலிருந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த துண்டுப் பிரசுரம், பெனர் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், பெற்றோல் குண்டுகள் என சந்தேகிக்கப்படும் 7 போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், கைது செய்யப்பட்டுள்ள அமித் ஜீவன் வீரசிங்கவின் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வன்முறை இடம்பெற்ற காலப்பகுதியில் உள்வந்த அழைப்புகள் தொடர்பில் விசேட அதிகாரிகளை கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டியில் கடந்த நான்காம் திகதி ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்திருந்தது.

இதனால் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.