யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்பட வேண்டும் என்று பிரார்தித்து யாழ். மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றுள்ளது.

அமலமரி தியாகிகள் சபையின் வட மாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த ஆராதனை ஆரம்பமாகி மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

"நாட்டில் மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைவர்கள் தமது சுயநலங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

மனிதர்களுடன் பேச்சு நடத்தி இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வை காண்பது இயலாத காரியம். அதனால் தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம் தான் அமைதி வேண்டி பிராதிக்க வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையை தீர்ப்பதற்கு நீதித்துறை பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்" என ஆராதனை உரையில் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா பிரார்த்தித்தார்.