வடக்கில் தேர்தல் பரப்புரைக்கு புலிகளின் பாடல்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளுக்கு, விடுதலைப் புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பாடல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே முறைப்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீ்ர்த்தி தென்னக்கோன்,

“இந்தப் பாடல்களை தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறலாகும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது பணியகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதியான அங்கஜன் இராமநாதன் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்.

அங்கு சிறிலங்கா அதிபரின் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, புலிகளின் பாடல்களும் ஒலிக்க விடப்பட்டிருந்தன.

இது தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. என்றாலும், இது சட்டமீறலாகும். இன, சாதி அடிப்படையிலான பரப்புரைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளின் அரசியல்வாதிகள் இதுபோன்று பாடல்களை ஒலிபரப்புகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழ்த் தேசியத்தை தூண்டும் இதுபோன்ற பாடல்களைப் பயன்படுத்தி சத்தமின்றி பரப்புரை செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சில அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து தாம் இதுபற்றி பேச்சு நடத்தியதாகவும் அவர் தெரிவித்துளளார்.