கண்டி வன்முறையில் உயிரிழந்த மூவரின் உறவினர்களுக்கு இழப்பீடு

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உயிரிழந்தவர்களுக்கும், சொத்து சேதங்களுக்கும் துரிதமாக நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தார்.

உயிரிழந்த மூவருக்காக ஆகக் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் நட்டஈட்டை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும், எஞ்சிய தொகையை வழங்குமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

கண்டியை மையப்படுத்தி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று மாலை 6 மணிவரை 280 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 95 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.