29 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கவுள்ள மூளாய், அச்சுவேலி சிற்றூர்தி சேவை!

யாழ்ப்பாணம் மூளாய், அச்சுவேலிக்கு இடையிலான 773 இலக்க வழித்தட தட்டிவான் சேவை, தனியார் சிற்றூர்தி சேவையாக எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மீளவும் செயற்படவுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டுவரை தட்டிவான் சேவையாக இருந்த இந்த வழித்தட சேவை செயற்பட்டு வந்த நிலையில், யுத்த சூழ்நிலையால், குறித்த வழித்தட சேவை தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூளாய் தட்டிவான் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இந்த வழித்தட போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதுதொடர்பில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த பெப்ரவரி மாதம் சந்தித்து, குறித்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் குறித்த வழித்தட சேவை ஆரம்பிப்பதற்கான விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு சேவையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மூளாய், அச்சுவேலிக்கு இடையிலான போக்குவரத்து சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.