யாழ் மீன் சந்தையில் சுகாதார சீர்கேடு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கொட்டடி மீன் சந்தையில் நடைபெறுகிற சுகாதார சீர்கேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொட்டடி மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் நுகர்வோர் தவிர வெளிமாவட்டம் மற்றும் சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணம் வருபவர்களும் பெருமளவில் குறித்த சந்தைக்கு வருவது வழமை.

இந்நிலையில் குறித்த சந்தையில் மீன்களை வியாபாரிகள் கொள்வனவு செய்வதற்கு இடம் இல்லாமையால் மக்கள் நடமாடும் நிலத்தில் மக்களின் கால்களுக்கு கீழ் விலை கூறப்படுகிறது .

இது மிகவும் சுகாதாரக் குறைவான ஒரு விடையமாக மக்களினால் அருவருப்பான ஒரு செயலாக பார்க்கபடுகின்றது.

குறித்த சந்தையில் இருந்து ஆண்டுதோறும் பல இலட்சம் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றது. எனினும் இதனை சீர் செய்வதற்கு யாழ் மாநகர சபை முயற்சிகளை எடுக்கவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழில் 5G தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இப்படியான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மாநகர சபை இருக்கின்றமை வேதனையான விடயம் என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் யாழ் மாநகர சபை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக முதல்வர் கவனத்திற்கு இந்த விடயத்தினை எடுத்து சீர் செய்ய வேண்டும் எனவும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரியுள்ளனர்.