சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி என்ற பெண்ணே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் நாளை மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை , இவருடன் சேர்த்து மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் இந்த தாக்குதலால் 500இற்கும் மேற்பட்டோர் அவயங்களை இழந்தும் படுகாயங்களுக்கு உள்ளாகியும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதல்கள் இடம்பெற்று 2 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.