மாணவிகளின் புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்ப படிவங்கள் வீதியில்!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கல்வி கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்ப படிவங்களை வீதியில் எறிந்துள்ளதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர் களின் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பபடிவங்களை பயன்படுத்தியுள்ளது.

இதில் மாணவிகள் மற்றும் மாணவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் குறித்த விண்ணப்பபடிவங்கள் நெளுக்குளம் கனரா ஒழுங்கையின் குளப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த வீதியால் பயணித்தவர்கள் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விண்ணப்பபடிவங்கள் தெருவில் காணப்படுவதை அடுத்து ,ஆராய்ந்தபோதே தனியார் கல்வி நிலையத்தின் அசமந்தப்போக்கு தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ள பெற்றோர் குறித்த தனியார் கல்வி நிலையத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை தமது கல்வி நிலையம் இடம் மாற்றப்பட்டபோது பழைய விண்ணப்ப படிவங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில், அவை வீதியோரங்களில் வீசப்பட்டுள்ளதாகவும் , எனினும் படிவங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் குறித்த தனியார் கல்வி நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.