மீண்டும் கன்னியாவை ஆக்கிரமிக்கும் புத்த விகாரை !

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணி முன்னெடுகப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தென்கயிலை ஆதீனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்கும் பணி தொடர்வதாகவும் நேரடியாக அங்கு சென்று தாம் அதனை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டபோது திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அங்கு புத்த விகாரை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறியாதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமலையில் இடம்பெற்ற அனைத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கும் நானும் சென்றிருந்ததாகவும் ,அங்கு கன்னியாவில் புத்த விகாரை அமைப்பதற்கு எந்த ஒரு அனுமதியும் எவராலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இடம்பெற்ற எந்த ஒரு கூட்டத்திலும் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமூகமளித்திருந்த பல அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் தாம் கேட்டதாகவும் , அவர்களும் எந்த ஒரு கூட்டத்திலும் இவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் எவ்வாறு தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு விகாரை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கேல்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் கடந்த மே மாத நடுப்பகுதியில் பிள்ளையார் இருந்த ஆலயத்தை உடைத்து புத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை ஆகியோருக்கும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசனுக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.