ஜா - எல இல் கோரவிபத்து - மறியல் போராட்டத்தில் மக்கள்

ஜா - எல ஏக்கலப் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜா-எல ஏக்கலப் பகுதியின் துடெல்ல ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் துடெல்லப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள் குறித்த ரயிலை போகவிடாது தடுத்து வைத்துள்ளதோடு, பாதுகாப்பற்ற கடவைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து பொலிஸாரும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருக்கிறனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரமாக குறித்த ரயிலை தடுத்து வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் நாட்டின் பல பகுதிகளுக்குமான ரயில் சேவை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பகுதியில் பாதுகாப்பான ரயில் கடவை இல்லாமையினால் ஐந்து மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.