முகம் சுளிக்க வைக்கும் நிலையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி!

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் வெகுவாகக் கவர்கின்ற ஒரு பிரதேசமாகும்.

அந்தவகையில் கீரிமலை புனித தீர்த்தக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டைய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள், மாருதப்பூரவல்லியின் குதிரை முகம் நீங்கிய கீரிமலை நகுலேஸ்வரக் கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திலுள்ள விலங்குகள் பராமரிப்புக்கூடங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிககளை ஈர்ப்பவை.

முன்னர் இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களை தீர்ப்பதற்காக கீரிமலைக் கடலும் கீரிமலை தீர்த்தக் கேணியும் பயன்படுத்தப்பட்டுவந்தது.

தற்போது கீரிமலை தீர்த்தக் கேணியில் பிதிர்க்கடன்களை தீர்க்க வருபவர்கள் மாத்திரம் நீராடுவதற்கு என்றில்லாது, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இத்தீர்த்தக் கேணியில் நீராடி விட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டவர்கள் சுற்றுலாப்பயணிகள் யாத்திரிகர்கள் அதிகம் வருகை தரும் கீரிமலை தீர்த்தக்கேணி அசுத்தமடைந்து தற்போது காட்சியளிப்பது அனைவரையும் முகம் சுளிக்கவைக்கும் நிலையை உண்டாக்கியுள்ளது.

கடல் வற்றுக்காலமாக காணப்பட்டாலும் தேங்கி இருக்கும் குப்பைகள் பாசிகள் என்பவற்றை அகற்றி நீரினை சுத்தம் செய்யவேண்டியது இதற்கு பொறுப்பானவர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கீரிமலை கேணி பராமரிப்பிற்கு என ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தும் இவ்வாறு கேணிகள் அசுத்தமானதாக காணப்படுகின்றதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளதோடு , இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.