ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட காணி- தவிசாளர் கூறிய பொய் அம்பலம்!

ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட காணியில் புதிய கட்டடத்திற்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கிய தவிசாளர், தற்போது அதை மறுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் , கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் ஆகியோரின் போலி இறப்பர் முத்திரை, ஒப்பத்துடன் ஏ9 வீதியில் காணி ஒன்று மோசடி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த காணியில் புதிய மாடி கட்டடம் அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனால் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2018-12-31 திகதியிடப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனின் கையொப்பத்துடன் புதிய கட்டடத்திற்கான அனுமதியினை மகிழ்ச்சியுடன் வழங்குவதாக தெரிவித்து விட்டு தற்போது தான் அவ்வாறு எதனையும் வழங்கவில்லை என அவர் கூறிவருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் கிளி நகர் கிராம அலுவலர் எஸ்.வி. ஜெயந்தன் ஆகியோரது பதவி நிலை இறப்பர் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டு குறித்த காணிக்குரிய கடிதம் எழுதப்பட்டு ஒப்பமிடப்பட்டுள்ளது.

ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய பெறுமதிமிக்க குறித்த காணி மோசடி செய்யப்பட்டமை கண்டியறியப்பட்டு கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் காரியாலத்தில் கிராம அலுவலரினால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் காணியில் தற்போது இரண்டு மாடி கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்டடங்கள் அமைப்பதாயின் பிரதேச சபையின அனுமதி பெறப்படல் வேண்டும் . எனவே மோசடி செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய கட்டடத்திற்கு கரைச்சி பிரதேச சபை அனுமதி வழங்கியதா என பிரதேச சபையின் அமர்வின் போது உறுப்பினர்களால் கேள்வி எழுப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தான் அவ்வாறு ஒரு அனுமதியினை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற கரைப்ச்சி பிரதேச சபையின் 17 வது அமர்வின் போதே தவிசாளர் இதனை தெரிவித்திருந்தார்.

ஆனால் புதிய கட்டடத்திற்கு கட்டட அனுமதியினை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் எழுத்து மூலம் வழங்கிய ஆவணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மோசடி செய்யப்பட்ட குறித்த காணியில் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியினை எழுத்து மூலம் வழங்கிவிட்டு , தான் எந்த அனுமதியும் வழங்கவில்லை என பொய் கூறிய தவிசாளரின் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மூலம் குறித்த மோசடிக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரும் உடந்தையாக செயற்பட்டுள்ளாரா என சந்தேகத்தையும் மக்கள் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.