கூட்டத்திற்கு வந்தால் அரச நியமனம்! விஜயகலா உத்தரவாம்

யாழ் மாவட்டத்திலுள்ள வேலையற்ற வெளிவாரி பட்டதாரிகள், அரசிய நியமனத்தை பெற வேண்டுமெனில் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தரப்பிலிருந்து கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நியமனம் பெறவிரும்பும் வேலையற்ற பட்டதாரிகள் தமது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து, மயிலிட்டிக்கு வந்து சேர வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணக்கப்பட்டிருந்த நிலையில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இது தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பிலும் வெளிவாரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், யாழிலுள்ள வேலையற்ற வெளிவாரி பட்டதாரிகளில் 35 வயதிற்கும் மேற்பட்டவர்களில் சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான பதிவு நடவடிக்கையில் ஈடுபடும்படியும் ஐ.தே.க ஆதரவு அணியால் வெளிவாரி பட்டதாரிகளிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பட்டதாரிகள் சங்கத்திலுள்ள ஐ.தே.க ஆதரவு அணியின் மூலமாக, இன்று பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 35 வயதிற்கும் மேற்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் 198 பேர் உள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் 45 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களில் குறிப்பிட்டளவானவர்களிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படும் என விஜயகலா தரப்பினால் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை தமது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு விஜயகலா தரப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பயன்படுத்தியமை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கூட்டமைப்பும் விசனம் வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாகவே வேலையற்ற இளைஞர், யுவதிகளையும், பட்டதாரிகளையும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கும், அரசியல் முயற்சிகளிற்கும் விஜயகலா மகேஸ்வரன் பயன்படுத்தி வருவது அதிகரித்திருந்தும், கூட்டமைப்பு இது குறித்து வாய்திறக்கவில்லை.

அத்துடன் நாளைய தினம் மயிலிட்டியில் இடம்பெறவுள்ள நிகழ்வில், மாவை சேனாதிராசாவும் உரையாற்றவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.