வடக்கில் புதிதாக 700 மாதிரிக் கிராமங்கள்

அனைவருக்கும் நிழல் எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கில் புதிதாக 700 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேதமாஸவின் ஆலோசனைக்கு அமைவாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக 55 ஆயிரம் பேர் நன்மை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 158 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டில் உள்ள சகல அரச வங்கிகளிலும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சொந்துருபியஸ கடன் திட்டத்தின் மூலம் வீடமைப்புக்கான கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நன்மை அடைந்துள்ள நிலையில் , மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அதிகளவானோர் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.