திருகோணமலையில் 12 கடற்படையினருக்கு விளக்கமறியல்!

கடந்த ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இரவு திருகோணமலை கொக்கிளாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைதான இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 12 கடற்படையினரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்று மீனவர்கள் காயமடைந்த விவகாரத்தில் நேற்றையதினம் கடற்படை வீரர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொக்கிளாய் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திடமான படகு ஒன்றை அவதானித்த்ததை அடுத்து படகை நிறுத்துமாறு கடற்படையினர் உத்தரவிட்டபோது அதனை பொருட்படுத்தாமல் படகில் இருந்தவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இதனால் கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு, படகில் இருந்த மூவரையும் கடற்படை ஒகஸ்ட் 29 ம் திகதியன்று குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து திருகோணமலை துறைமுக பொலிஸார் இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 10 கடற்படை வீரர்களிடம் விசாரணைகளை நடத்தியபின்னர் அவர்களை விடுவித்தனர்.

மீண்டும் அவர்களை கடந்த 30 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் திருகோணமலை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்றையதினம் குறித்த 12 கடற்படை உத்தியோகத்தர்களையும் கைது செய்த திருகோணமலை பொலிஸார் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைபடுத்தியபோது இந்த மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் அன்றைய தினம் குறித்த சந்தேக நபர்களை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.