சஜித்தின் அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றினை நடத்தி அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் பெயரிட வேண்டுமெனகட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார் .

தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக பிரதமருக்கு தாம் நேற்று கடிதம் அனுப்பியதாகவும், நாடாளுமன்ற குழு மற்றும் செயற்குழு தன்னை வேட்பாளராக்குவது குறித்து விரைவில் முடிவொன்றுக்கு வர வேண்டுமெனவும் அதில் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான மக்கள் ஆணை தனக்கு இருக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சிக்குள் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதால், நல்லிணக்கத்தை நீடிக்க செய்ய உடனடியாக கட்சி கூட்டங்களை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வலியுறுத்தியுள்ள அவர் தேவைப்படின் இரகசிய வாக்கெடுப்பை நடத்தலாம் என்றார்.

இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தல் என்பதையும் பிரதமர் மனதில் வைத்திருக்க வேண்டும் என்றும், மக்கள் விரும்புவதை ஜனநாயக வழியில் மேற்கொள்வதே எனது நோக்கம் என்றார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவிர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.