தீவிரமாக பரவிவரும் டெங்கு

மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மினுவாங்கொடையின் , நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற பகுதிகளில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளிகள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில், டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது, டெங்குக் காய்ச்சல் நோய் பரவியுள்ள பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவுப் பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,