பிறந்த குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிய கொடூர தாய்..! பதறவைக்கும் சம்பவம்

முந்தல் கல்குளிய பகுதியில் பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாயொருவர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

32 வயதான குறித்த இளம் தாய் வசித்து வந்த இடத்தை அண்மித்த தோட்டமொன்றில் கைவிடப்பட்ட கிணற்றில் ஒன்றில் இருந்தே குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையைப் பெற்றெடுத்த குறித்த தாய் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் அந்தக் குழந்தையை வீசியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில், அதன் பின்னர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் ௯றப்படுகிறது.

ஏற்கனவே செய்து கொண்ட திருமணத்திலிருந்து ஒரு குழந்தையைப் பெற்ற இவர், கணவரைப் பிரிந்ததன் பின்னர், தனது பிள்ளையை வளர்ப்பதற்காக காட்டுநாயக்கவிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண், இந்த வருடம் ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்குத் திரும்பி நிலையில்

வயிற்றில் எண்ணெய் கட்டி ஒன்று இருப்பதாகக் கூறி , கர்ப்பமாக இருப்பதை தன் குடும்பத்தினரிடமிருந்து மறைத்து வந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளம் தாயார் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.