மட்டக்களப்பில் சம்பளம் கோரிய ஊழியர்களிற்கு நேர்ந்தகதி

மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள ஆயுள்வேத நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது கடந்த மாத சம்பளப் பணத்தினை வழங்குமாறு கோரியபோது அதன் பணிப்பாளர் அவர்களை வேலையிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊழியர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென 2 நாட்களாக தொடர்ந்து பணிப்பஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் கல்குடா பொலிஸ் நிலையத்தில் குறித்த நிலையத்தின் பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்களினால் தமது நிலை குறித்து முறைப்பாடு ஒன்றையும் நேற்று பதிவு செய்திருந்த நிலையில் , அது தொடர்பான விசாரணை இன்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊழியர்களுக்கான சம்பளம் பணத்தினை வழங்குவதாகத் தெரிவித்து தமது நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நிறைவேற்றுப் பணிப்பாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, நிறுவனத்திற்குச் சென்ற ஊழியர்களை உள்ளே செல்ல விடாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிலையத்திற்கு முன்பாக ஊழியர்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.