முல்லைத்தீவில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியர் - வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்...!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல தற்காப்பு கலை ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இணைய ஊடகங்களில் செய்தி பரவி வருகின்றது.

தனுஜன் எனும் குறித்த நபர் நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் வெளிநாடு ஒன்றிக்கு தப்பி செல்வதற்காக இவ்வாறான போலிசெய்தியினை பரப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த இளைஞர் முறையாக தற்காப்பு கலை பயிற்சி முடிக்காதவர் என்பதோடு கராட்டி சங்கத்தால் அங்கீகரிக்கபடாத நபர் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த நபர் தன்னை பிரபல தற்காப்பு ஆசிரியர் என கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும் பிரபல தற்காப்பு கலை ஆசிரியர் விசனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் போராளிகள் மாவீரர்கள் குடும்பங்களுக்கு உதவுவதாக புலம்பெயர் உறவுகளிடம் பணம் பெற்று நிதி மோசடி செய்ததனால், சில தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த நிலையில் நிதி மோசடி காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.

இவ்வாறன போலி செய்திகள் தனது புலம்பெயர் தஞ்ச கோரிக்கைக்கு பலமாக இருக்கும் என்பதால் திட்டமிட்ட நாடகம் ஒன்றை அவர் உருவாக்கி உள்ளதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், இன்றுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் அவரது மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.