கடற்படையினரால் கடத்தப்பட்ட ராஜீவ் நாகநந்தன் தாயாருக்கு அனுப்பிய கடைசி செய்தி

2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்ட ராஜீவ்நாகநந்தன் 2009 மே 21 ம் திகதி தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார்.

இலங்கை கடற்படையினரால்கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர் என்பதை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர்.

பிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டனர்.

மே21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி அழைப்பாக அமைந்தது.

குறித்த தொலைபேசி அழைப்பு குறித்து கடந்த மாதம் சிஐடியினர் சரோஜினி நாகநாதனிடமிருந்து மீண்டும் ஒரு வாக்குமூலத்தை பெற்றிருந்தனர்.

இதன்போது திருகோணமலை கடற்படை முகாமில் தனது நண்பர்களுடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை ராஜீவ் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசியை பெற்று தனது தாயுடன் உரையாடியதாக அவர் குறிப்பிடிருந்தார்.

தனது மகன் கடத்தப்பட்ட பின்னர் அவர் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல்களை சரோஜினி முழுமையாக தனது நாட்குறிப்பொன்றில் பதிவு செய்துள்ளார்.

அதன்படி தடுப்பு முகாமில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதாக தனது மகன் தெரிவித்த மகன் மிகுந்த அச்சத்திலிருந்தான் எனவும் சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

அம்மா அவர்கள் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் இங்கு கொண்டு வந்து சுட்டுக்கொலை செய்கின்றனர் என எனது மகன் தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் சிஐடியினருக்கு தெரிவித்துள்ளார்.

எனது மகன் கழிவறைக்கு அழைத்து செல்லப்பட்டவேளை இரத்தக்கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான் தனக்கும் அந்தகதி ஏற்படுமோ என அவன் அச்சம் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிலையில் நான் அவனிற்கு கடவுள் இருக்கின்றார் உன்னை காப்பாற்றுவார் என தெரிவித்ததாகவும் சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியமாகவுள்ள கொத்தலாவல பண்டுகுமார தனக்கு சாப்பாடு சுற்றிவந்த பேப்பரில் ஐயப்பனின் படம் காணப்பட்டதாகவும் அதனை தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரஜீவ் தாயாரிடம் தெரிவித்துள்ளான்.

கடந்த வாரம் கொழும்பு நீதவானிற்கு சமர்ப்பித்த பி அறிக்கையில் சிஐடியினர் 2009 மே 21 ம் திகதிக்கு பின்னர் ராஜீவ் நாகநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெலியிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரான சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட திருகோணமலை கண்சைட் முகாமில் 18 முதல் 20 வயதிற்குபட்ட இளைஞர் யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒருதசாப்தத்திற்கு மேல் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்ககூடும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருந்த பெற்றோர்களிற்கு சிஐடியினரின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்களும் கடத்தப்பட்ட எட்டுமாதங்களின் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற முடிவிற்கு தனது விசாரணையாளர்கள் வருவதாக விசாரணைகளிற்கு பொறுப்பாகவுள்ள சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ரஜீவிற்கும் அவரது தாய்க்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏனைய சாட்சிகளும் சிஐடியினர் இந்த முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

தமது சாட்சியங்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சிஐடியினர் குறிப்பிட்ட கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கிரிசான் வெலகெதரவும் கடற்படை உத்தியோகத்தர் செனிவரட்ண என்பவரும் கடத்தப்பட்ட 11 பேரும் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளனதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடத்தப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் சீட்டினால் போர்த்தப்பட்டு டிரக்கில் ஏற்றப்பட்டதை தான் பார்த்தேன் என வெலகெதர ஏற்றுக்கொண்டுள்ளார்.

வெலகெதர வின் இந்த அறிக்கை மிகவும வலுவான ஆதாரம் என தெரிவித்துள்ள நிசாந்த சில்வா இதுவே கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு வர காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஜீவ் தனது தாய்க்கு தெரிவித்தபடி விசாரணையின் போது கடற்படையினர் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்களை சட்டவிரோத கடத்தி உடல் உள சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை படுகொலை செய்தனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் சிஐடி அதிகாரி கூறியுள்ளார்.

எனினும் காணாமல்போன டிலான் ஜமால்தீனின் தாய் ஜெனீபர் வீரசிங்க எனது மகன் இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு நான் தயாரில்லை,உறுதியாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே நான் அதனை நம்புவேன் எஞ்சிய உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையை நம்புவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எனது மகன் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்த அவர், அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது உறுதியான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.